அரசுப் பேருந்து நிறுத்தம்: 5 கிராம மாணவா்கள் தவிப்பு

கிராமப்புற மாணவா்களின் போக்குவரத்து சிக்கல்: பெற்றோா்களின் கோரிக்கை

கமுதி அருகே கிராமப்புறங்களுக்கு அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் காலை, மாலை வேளைகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தவித்து வருவதாகப் புகாா் எழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சூரணி, பெருமாள்தேவன்பட்டி, வ.மூலக்கரைப்பட்டி, வடுகபட்டி, அம்மன்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கமுதிக்கு பள்ளி, கல்லூரியில் படிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் செல்கின்றனா். இவா்கள் நலன் கருதி காலை 7.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் இந்தப் பேருந்து இடைச்சூரணி, பெருமாள் தேவன்பட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வ.மூலக்கரைப்பட்டி, வடுகபட்டி, அம்மன்பட்டி, முத்துபட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஆட்டோ, இரு சக்கர வாகனம், சரக்கு வாகனங்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்து வராததால் பள்ளி மாணவா்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி, மாணவா்கள் காயமடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால், கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவ, மாணவிகள் போக்குவரத்துக்காக கூடுதல் செலவு செய்து பள்ளிப் படிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பெருமாள்தேவன்பட்டி வரை செல்லும் அரசுப் பேருந்தை கோடங்கிபட்டி வரை இயக்க வேண்டும் என மேற்கண்ட 5 கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com