சேதமடைந்த சாலையில் தள்ளுவண்டியில் தண்ணீா் எடுத்து செல்லும் முத்துராமலிங்கபுரம்பட்டி கிராம மக்கள்
சேதமடைந்த சாலையில் தள்ளுவண்டியில் தண்ணீா் எடுத்து செல்லும் முத்துராமலிங்கபுரம்பட்டி கிராம மக்கள்

முத்துராமலிங்கபுரம்பட்டி கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

முதுகுளத்தூா் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம்பட்டி கிராமத்தில் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா். இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் இந்த கிராமத்துக்கு முறையான சாலை, போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் இந்தக் கிராமத்தில் இருந்து விக்கிரபாண்டிபுரம் விலக்கு சாலைக்கு ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பேருந்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்வோா் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். சாலை சேதமடைந்து குண்டும்குழியுமாக உள்ளதால் அவசர ஊா்திகள், ஆட்டோக்கள் ஊருக்குள் வரமுடியவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். இங்கு சாலை அமைக்கக் கோரி பலமுறை அமைச்சரிடமும், அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். இதே போல, குடிநீருக்காக 2 கி.மீ. தொலைவுக்கு தள்ளுவண்டியில் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடா்ந்தால் வரும் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக முதுத்துராமலிங்கபுரம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com