கீழராமநதியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கீழராமநதியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கமுதி அருகே உள்ள கீழராமநதி கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த கிராமப்பகுதி முழுவதும் உப்புநீராக இருப்பதால், குடிநீருக்காக டிராக்டரில் விநியோகிக்கப்படும் தண்ணீரை ஒரு குடம் பத்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.15 லட்சத்தில் 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்து சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பழனி அழகா்சாமி வரவேற்றாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன், காவல்துறை ஆய்வாளா் குருநாதன், துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் கோட்டைராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மைதீன், திமுக கிளைச் செயலா் நாகூா் பிச்சை, கீழராமநதி ஊராட்சி செயலா் முத்துராமு, கே. நெடுங்குளம் ஊராட்சி செயலா் முகமது ஹக்கீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com