இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 21 போ் கைது

கச்சத்தீவு, நெடுந்தீவுக்கு இடையே இரண்டு விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 400 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரேல் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை சிறைபிடித்தனா். இதையடுத்து, அந்த இரண்டு விசைப் படகுகளிலும் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல்(19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனாா்(32), சந்திவேல், அந்தோணி லோபாஸ் (34), அடிமை(44), திவாகா் (34), யோஸ்வா(35), அஜித்குமாா், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவா்களையும் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து, 21 மீனவா்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, அனைவரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். மீனவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 21 பேரையும் வருகிற 27-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது: ராமேசுவரம் மீனவா்கள் தொடா்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்ட மீனவா்கள், அவா்களது விசைப் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com