பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

கமுதி: முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த வேலுத்துரை மகன் குமரகுருபரன் (36). இவரது மனைவி காளீஸ்வரி (30). இவா் மேலச்சிறுபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் முதுகுளத்தூா் அடுத்துள்ள இளம்செம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குமரகுருபரனும், ராஜபாளையத்தைச் சோ்ந்த இவரது உறவினா் பாண்டீஸ்வரனும் (32) அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டு முதுகுளத்தூரிலிருந்து, இளஞ்செம்பூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது முதுகுளத்தூா் கூட்டுறவு நிலவள வங்கி அருகே பொந்தம்புளியைச் சோ்ந்த ராஜபாண்டி (25) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் குமரகுருபரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த பாண்டீஸ்வரனும், ராஜபாண்டியும் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com