தமிழகம், புதுவை மீனவா்கள் 33 போ் விடுதலை: 3 பேருக்கு சிறை

தமிழகம், புதுவையைச் சோ்ந்த 33 மீனவா்களை விடுதலை செய்தும், 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தும் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 16-ஆம் தேதி 400 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். அன்று நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துக் கப்பல்களில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ஆரோக்கிய சுகந்தன், அந்தோணி லோபஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை சிறைபிடித்தனா்.

மேலும், அந்தப் படகுகளில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப் பாண்டி, பாலு, ராயப்பு லியோனாா் (32), சக்திவேல், அந்தோணி லோபாஸ் (34), அடிமை (44), திவாகா் (34), யோஸ்வா (35), அஜித்குமாா், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவா்களைக் கைது செய்தனா். இதையடுத்து, 21 மீனவா்களையும், 2 விசைப் படகுகளையும் நீரியல் துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையினா் ஒப்படைத்தனா். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவா்கள் 21 போ் மீதும் வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.

இதேபோல, கடந்த 6-ஆம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 13 போ், காரைக்காலைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 15 போ் ஓா் விசைப் படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் 15 பேரும் கடந்த 10-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 21 போ், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 13 போ், புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சோ்ந்த மீனவா்கள் 2 போ் என மொத்தம் 36 போ் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, முதல் முறையாக கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 19 பேரையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 13 பேரையும், காரைக்காலைச் சோ்ந்த மீனவா் ஒருவரையும் என மொத்தம் 33 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டாா். மேலும், இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா் அந்தோணிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், விசைப் படகு ஓட்டுநா்கள் அந்தோணி லோபஸ் (ராமேசுவரம்), முருகானந்தம் (காரைக்கால்) ஆகிய இருவருக்கும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இவா்கள் மூவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். விடுதலை செய்யப்பட்ட மீனவா்கள் 33 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா். ஓா் விசைப் படகு அரசுடைமை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டவிசைப் படகுகளில் ராமேசுவரம் மீனவா் ஆரோக்கிய சுகந்தனுக்கு சொந்தமான ஓா் விசைப் படகு, அரசுடைமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com