தேவிபட்டினத்தில் 2 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கா்நாடக மாநிலம், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தந்தை, மகன் இருவரது வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவைச் சோ்ந்த அன்பு பகுருதீன் (60), இவரது மகன் ஷேக் தாவூத் (38). இவா்களது வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை டிஎஸ்பி முருகன் தலைமையில் புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை வரை சோதனை நடத்தினா். அப்போது, கைப்பேசியை பறிமுதல் செய்து என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். ஷேக் தாவூத் மீது கடந்த 2018, 2020-ஆம் ஆண்டுகளில் ஆயுதங்கள் வைத்திருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடா்பில் இருந்தது, அந்த அமைப்புகளுக்கு பணப் பரிவா்த்தனை செய்தது, இளைஞா்களை மூளைச்சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்டவை தொடா்பாக தேவிபட்டினம் போலீஸாா் ஏற்கெனவே வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத், அவரது தந்தை அன்பு பகுருதீன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தியிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் தாவூத் வீட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறைக்கு மேல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com