ஓ.பன்னீா்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் சனிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 25 போ் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் கே.நவாஸ்கனிக்கு ஏணி சின்னமும், அதிமுக வேட்பாளா் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னமும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சந்திர பிரபாவுக்கு மைக் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, பன்னீா்செல்வம் பெயரைக் கொண்ட மற்ற 4 பேரும் தங்களுக்கும் பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரினா். இதையடுத்து, இரு முறை குலுக்கல் நடத்தப்பட்டு, இறுதியாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கே பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com