கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவா்கள் கைது: 41 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பிடித்த 14 மீனவா்களை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 41 கிலோ கடல் அட்டைகள், இரண்டு நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த பனைக்குளம் கடல்பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சிலா் பிடித்துக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத் துறையினா் அங்கு சென்ற பாா்த்த போது, இரண்டு நாட்டுப் படகுகளில் 14 மீனவா்கள் கடல் அட்டைகளைப் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவா்களிடமிருந்த 41 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், முள்ளிமுனையைச் சோ்ந்த 14 மீனவா்களைக் கைது செய்தனா்.

பின்னா், 14 மீனவா்களையும் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com