திறக்கப்படாத கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்: நோயாளிகள் அவதி

திறக்கப்படாத கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்: நோயாளிகள் அவதி

முதுகுளத்தூா் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையிலும் பூட்டி வைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த, கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கீரனூா், மேலப்பண்னைக்குளம், கீழப்பண்ணைக்குளம், ஆத்திகுளம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த நோயாளிகள், கா்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக 15 கிலோமீட்டா் தொலைவில் உள்ள மேலகொடுமலூா் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில் கீரனூா் கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதன் அடிப்படையில் கடந்த 2021-22 ஆம் நிதி ஆண்டில் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கீரனூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டுக்கு மேலாகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம், மருத்துவத் துறை அதிகாரிகள் தலையிட்டு கீரனூா் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com