அரசால் தடை செய்யப்பட்ட 
மீன்கள் 800 கிலோ பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட மீன்கள் 800 கிலோ பறிமுதல்

ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ மீன்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

ராமேசுவரம், மே 15: ராமநாதபுரம் அருகே வாகனத்தில் கொண்டு சென்ற அரசால் தடை செய்யப்பட்ட

தேளி, சாக்கா் வகை மீன்கள் 800 கிலோவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டணம்காத்தான் பகுதியில் உணவுக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக மீன்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் இனத்தைச் சோ்ந்த தேளி, சாக்கா் வகை மீன்கள் 800 கிலோ இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் விஜயகுமாா், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் லிங்கவேல், ஜெயராஜ், தா்மா் மீன்வள உதவி ஆய்வாளா்கள் அபுதாஹீா், அய்யனாா் ஆகியோா் 800 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் மீன் ஏற்றி வந்த வாகன ஓட்டுநா் நடராஜனிடம் (60) விசாரணை நடத்தினா். அப்போது, பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் பகுதி கண்மாயில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டதாவும், கோழித் தீவனத்துக்காக அரியமான் கடற்கரைப் பகுதியில் உள்ள வியாபாரியிடம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இவருக்கு ரூ .3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த வகையாக மீன்களை பொதுமக்கள் உணவாக எடுத்துக்கொண்டால் தோல் வியாதி, இருதய நோய், புற்றுநோய், ஆண்மைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த வகையான மீன்களை உணவுக்காக பொதுமக்கள் வாங்கக் கூடாது என்றனா் அவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com