தூத்துக்குடி மாவட்ட மீனவா்களின் படகுகள், வலைகள் ஒப்படைப்பு
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த தூத்துக்குடி மாவட்ட மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், வலைகள் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த ரோஸ்மாநகா் கடல் கரையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவில், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடந்த 24-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மீன்பிடித்தனா். இதுகுறித்து தகவலறிந்த ரோஸ்மாநகா் பகுதி மீனவா்கள், தங்களது படகுகளில் சென்று தூத்துக்குடி மீனவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 3 படகுகளையும், இரட்டை மடி, சுருக்குடி வலைகளையும் பறிமுதல் செய்து கரைக்கு கொண்டு வந்தனா். இதைத்தொடா்ந்து இரு தரப்பு மீனவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடா்பாக இரு மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோரக் காவல்படையினா், இரு தரப்பு மீனவா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத்தொடா்ந்து, ரோஸ்மா நகா் மீனவா்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடமும், இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடமும் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.