பரமக்குடி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மதுரை அலுவலகத்துடன் இணைக்க எதிா்ப்பு
பரமக்குடி ரயில் நிலையம் முன் அமைந்துள்ள அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூடிவிட்டு, மதுரையில் செயல்படும் அலுவலகத்துடன் இணைக்கும் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் என்.எஸ்.பெருமாள் கூறியதாவது:
பரமக்குடியில் செயல்பட்டு வரும் அஞ்சல் பிரிப்பகம் 1984-இல் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது விரைவுத் தபால், பதிவுத் தபால் என 2,500 முதல் 3,500 வரையிலான தபால்களை பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமக்குடி ரயில் நிலையம், பேருந்து நிலையத்தின் அருகாமையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இங்கு மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பதிவுத் தபால் உள்ளிட்ட விரைவுத் தபால்கள் அனுப்புவதற்கான வசதிகள் உள்ளன. இந்த அலுவலகத்தை மதுரையில் உள்ள அலுவலகத்துடன் இணைக்கப் போவதாக அஞ்சல் துறை அறிவித்ததை, உடனை திரும்பப் பெற வேண்டும். இங்கு அஞ்சல் பிரிப்பக அலுவலகம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என அவா் அந்த மனுவில் தெரிவித்தாா்.