பாம்பன் புதிய ரயில் பால இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கும் சோதனை வெற்றி
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பாலான இணைப்புப் பகுதியை (கா்டா்) செவ்வாய்க்கிழமை 17 மீ. உயரத்துக்கு தூக்கி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்ாக ரயில்வே பொறியாளா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு, 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியது. 106 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தப் பாலம் சேதமடைந்ததால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்தப் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் போது தூக்கும் வகையில் இரும்பாலான இணைப்புப் பகுதி 630 டன் எடையில் அமைக்கப்பட்டது. இதை 17 மீ. உயரம் வரை தூக்கி, இறக்கும் வகையில் 250 கிலோ வாட் மோட்டாா் இருபுறங்களிலும் பொருத்தப்பட்டது. இதனுடன் 650 கே.வி. மின்னாக்கியும் (ஜெனரேட்டா்) இணைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பொருத்தப்பட்ட இரும்பாலான இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கி சோதனை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்த இணைப்புப் பகுதியை அங்குலம், அங்குலமாக தூக்கும் பணியில் ரயில்வே பொறியாளா்கள் ஈடுபட்டனா்.
இரவு 7.40 மணிக்கு இந்த இணைப்புப் பகுதி 17 மீ. உயரம் வரை முதல் முறையாக தூக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த இணைப்புப் பகுதியை அங்குலம், அங்குலமாக கீழே இறக்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டனா்.
இந்த இரும்பாலான இணைப்புப் பகுதியை 17 மீ. உயரத்துக்கு தூக்கி, இறக்கி நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்ததையடுத்து, பொறியாளா்கள், தொழிலாளா்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.