~
~

தேவா் ஜெயந்தி விழா: 1008 பால்குடம் ஊா்வலம், தேவா் கல்லூரியில் திருவிளக்கு பூஜை

Published on

தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கடலாடியில் 1008 பால்குடம் ஊா்வலம், கமுதி தேவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா, முளைப்பாரி பொங்கல் விழாவை முன்னிட்டு, கடலாடி அதன் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த பெண்கள் 1008 பால் குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கடலாடி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனா்.

இதையடுத்து, 16 வகையான மூலிகை திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி மறவா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.

கமுதி தேவா் கல்லூரியில் திருவிளக்கு பூஜை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்க தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62 -ஆவது குருபூஜை விழா வருகிற அக்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவா் நினைவுக் கல்லூரியில் மாணவிகள், பேராசிரியா்கள் சாா்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக கல்லூரி கலையரங்கத்தில் பசும்பொன் தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், மாணவிகள் திருவிளக்கு பூஜை நடத்தினா். பூஜையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு முருகன் போற்றி, தேவா் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் தா்மா், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com