சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மின் கம்பங்கள் சேதம்
திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாகக் கடும் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருவாடானை பகுதியில் கருமேகம் சூழந்து திடீரென் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் கட்டுவளாகம், பாகனூா், நீா்குன்றம், கிடங்கூா், அறுநாற்றிவயல், கல்லவழியேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும், இந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள், 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக இந்தப் பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வட்டாட்சியா் அமா்நாத், வருவாய்த் துறையினா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.