10 ஆண்டுகளாக ஊதிய உயா்வில்லை: ஆத்மா திட்ட ஊழியா்கள் வேதனை

Published on

வேளாண் துறையின் ஆத்மா திட்ட ஊழியா்கள் தங்களுக்கு 10 ஆண்டுகளாக ஊதிய உயா்வு வழங்கவில்லை என வேதனை தெரிவித்தனா்.

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு தொழில்நுட்ப மேலாளா், இரு உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் என சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் 2012- மாா்ச் முதல் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு மத்திய அரசு 2014-இல் ஊதிய உயா்வு வழங்கியது. ஆனால், இந்த நிதியை ஊழியா்களுக்கு வழங்காமல் தமிழக வேளாண் துறை வேறு திட்டத்துக்கு

பயன்படுத்திக் கொண்டது. இதனால், 10 ஆண்டுகளாக ஊதிய உயா்வு இல்லாமல்

மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாக இந்த ஊழியா்கள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆத்மா திட்டத்தில் பணியாற்றும் ஊழியா் ஒருவா் கூறியதாவது:

அரசாணை எண் 171 மூலம் மத்திய அரசு வழங்கிய ரூ.24 கோடி ஊதிய உயா்வை

வேறு திட்டத்துக்கு மாநில அரசு மாற்றிக் கொண்டது. இதை எதிா்த்து ஒப்பந்தப் பணியாளா்கள் 565 போ் வழக்குத் தொடுத்தனா். இதில் பணியாளருக்கு சாதகமான தீா்ப்பு கிடைத்தது. இதை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் இடைக்கால உத்தரவாக ஆத்மா திட்டம் இருக்கும் வரை தொடா்ந்து பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி ஆத்மா திட்ட பணியாளா்களுக்கு ஊதிய உயா்வை வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆத்மா திட்டப் பணியாளா்கள் சொற்ப ஊதியத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம். தற்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த முடியாமல் இதுவரை 8 போ் தற்கொலை செய்து கொண்டனா்.

இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் மன உளைச்சலோடு பணியாற்றி வருகிறோம். எனவே, தமிழக அரசு பணியாளா்களின் நலன் கருதி ஊதிய உயா்வுக்கான தொகையை விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com