காரில் ஆயுதங்களுடன் 12 போ் கைது
கமுதி: பெருநாழி அருகே காரில் ஆயுதங்களுடன் வந்த 12 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள துத்திநத்தம் விலக்கு சாலையில் பெருநாழி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருநாழியிலிருந்து வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் அரிவாள், பெப்பா் ஸ்பிரே உள்ளிட்டவை இருந்தன. பெருநாழிப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட வந்தவா்கள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்த இடிவிலகியைச் சோ்ந்த செந்தில் மகன் ரமேஷ் கண்ணன் (19), காளிமுத்து மகன் சரவணன் (30), மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் குட்டமணி, பாலமுருகன் மகன் யோகேஷ்வரன், அழகா்சாமி மகன் பாலமுருகன் (21), கோவிந்தராஜ் மகன் பாரதி சந்தோஷ், ஞானவேல் மகன் வீரக்குமாா் என்ற பிரகாஷ், மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த முகமது பாக்ஸ் மகன் அல்ஜுபைா் (18), முத்துக்குமாா் மகன் கருணாகரன் (19), மதுரையைச் சோ்ந்த விஷால்குமாா் (19), வழிவிட்டான் மகன் சரவணன், பொந்தம்புளியைச் சோ்ந்த ராமா் மகன் கவி (20) ஆகிய 12 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து காா், ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.