மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் -சிகிச்சை முறை குறித்து நோயாளியிடம் கேட்டறிந்தாா் ஆட்சியா்
நயினாா்கோவில் அருகேயுள்ள கங்கைகொண்டான் கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மருந்துப் பொருள்கள் குறித்துக் கேட்டறிந்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் செய்தல், மருந்துகள் வழங்குதல், இயனமுறை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வருபவா்களில் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள், இயலாமையில் உள்ளவா்களுக்கு உயா் ரத்த அழுத்தம், நீரழிவு நோய்களுக்கு மருந்துகளை களப் பணியாளா்கள் நேரில் சென்று வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், நயினாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட கங்கைகொண்டான் கிராமத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று வரும் முத்தம்மாளை (60) நேரில் சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துப் பொருள்கள் குறித்தும் கேட்டறியப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.