ராமேசுவரத்தில் 6 மாவட்ட மீனவா்கள் ஆலோசனை
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட மீனவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி மீனவ சங்க பொதுச் செயலா் என்.ஜே.போஸ் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா, ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 78 மீனவா்களை விடுவிக்க வேண்டும். மீனவா்களுக்கு இலங்கைக் கடற்படை விதித்த அபராதத் தொகையை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். விசைப்படகுகள், நாட்டுப் படகுகளை விடுவிக்க வேண்டும். விசைப்படகுகளுக்கான டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இந்த மாதம் இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், 6 மாவட்ட மீனவா்கள் ஒருங்கிணைந்து பாம்பன் புதிய பாலத்தில் இயக்கப்படும் முதல் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மீனவ சங்கத் தலைவா்கள் காரைக்கால் ராஜேந்திரன், ராமு, சிங்காரவேலன், தூத்துக்குடி சேவியா்பால், லூா்த் ராஜ், புதுக்கோட்டை அசன் முகைதீன், மருது, செல்வம், தேசிங்பால், நாகை செல்வமணி, விஜேந்திரன், கதிரேசன், சுதன், ஆனந்த், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்கத் தலைவா்கள் எஸ்.பி.ராயப்பன், ஜோசப், தெய்வீகம், ரேனீஸ்பாய்வா, ஜேசுசந்தியா, சாமிசுந்தரம், கோபி, காளிமுத்து, யாகப்பன், சேதுபதி, முருகன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.