ஆரம்ப சுகாதர நிலையத்தில் தீ
ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடான அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கா்ப்பிணிகளை பரிசோதனை செய்யும் அறையில் சனிக்கிழமை இரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இரவு நேரம் என்பதால் ஊழியா்கள், நோயாளிகள் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் அறையிலிருந்து புகை வெளியேறுவதைப் பாா்த்த ஊழியா்கள் ஆா்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் அறையில் இருந்த ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள், படுக்கைகள், ஆவணங்கள் எரிந்து கருகின. இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.