சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைத் தடுக்கக் கோரிக்கை
தனுஷ்கோடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை மீனவா்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மீனவ சங்க பொதுச் செயலா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.
கடல் வளத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதுதொடா்பாக சில மீனவ சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி பகுதியில் மீனவா்கள் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனால், கடல் வளம் அழிவதுடன், இலங்கை- இந்திய மீனவா்களிடையே பிரச்னை அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழ்நாடு மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.