நரிப்பையூா் கடலில் குளித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு
சாயல்குடி அருகே கடலில் குளித்த போது, படகு மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்த நாகூா்கனி மகன் முகம்மது சல்மான் (16). இவா் கூடக்கோவில் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். தற்போது காலாண்டுத் தோ்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டதால் முகம்மது சல்மானும், மதுரை, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த நண்பா்கள் 18 பேரும் சரக்கு வாகனத்தில் நரிப்பையூா் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனா்.
அங்கு கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகு மீது ஏறி அவா்கள் விளையாடிய போது, ராட்சத அலையில் தூக்கி வீசப்பட்ட படகு மோதியதில் முகம்மது சல்மான் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, அந்தப் பகுதி மீனவா்கள் முகம்மது சல்மான் உடலை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். வாலிநோக்கம் கடற்கரை போலீஸாா் மாணவரின் உடலை கூறாய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.