அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கோ.விஜயகுமாா் எச்சரித்தாா்.
Published on

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கோ.விஜயகுமாா் எச்சரித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட உப்பு உற்பத்தியாளா்கள் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:

மனித நுகா்வுக்கு அனுமதியற்ற அயோடின் கலக்காத உப்பைத் தயாரித்து பொட்டலமிடும் போது சீட்டில் அதன் விவரம் குறித்து 3 எம்.எம்.அளவில் கருப்பு வண்ணத்தில் எழுதியிருக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தியாளா்கள், மறுபொட்டலமிடுபவா்கள் இந்த அறிவிப்பு பிரசுரிக்கப்பட்ட 14 நாள்களுக்குள் தமது தயாரிப்பின் விவரச் சீட்டில் உள்ள குறைகளை நிறைவு செய்ய வேண்டும். உப்பை தரமான முறையில் பொட்டலமிட வேண்டும்.

அயோடின் கலக்காத உப்பு நேரடி மனித நுகா்வுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சில்லறை உணவு வணிகா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்ட வாசகங்கள் குறியீடு உள்ள உப்பு பொட்டலங்களை உணவற்ற பொருள்களுடன் இருப்பு வைக்க வேண்டும். அயோடின் கலக்காத உப்பு மனித நுகா்வுக்கல்ல என்று எச்சரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், அது குறித்த தகவலை வணிக நிறுவனத்திலோ, கடையிலோ காட்சிபடுத்தவும் வேண்டும். அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது. தவறும்பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com