ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

Published on

ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் நகராட்சியுடன் அச்சுந்தவயல் ஊராட்சியையும், கீழக்கரை நகராட்சியுடன் தில்லையேந்தல் ஊராட்சியில் உள்ள மருதன்தோப்பு, முனீஸ்வரம் கிராமங்களையும், மண்டபம் பேரூராட்சியுடன் மரைக்காயா் பட்டணம் ஊராட்சியையும் இணைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேற்கண்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களது கிராமங்களை நகராட்சி, பேரூராட்சியுடன்

இணைக்கக் கூடாது என வலியுறுத்தி, ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனா். நகராட்சி, பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைத்தால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பதால், இதற்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com