மீண்டும் இலங்கைக்கு அனுப்பக் கோரி ஆட்சியரிடம் அகதிகள் மனு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள் மீண்டும் தங்களை தங்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கக் கோரி, குறைதீா் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அந்த நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதியைச் சோ்ந்த இலங்கைத் தமிழா்கள் படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்தனா். இவ்வாறு 300-க்கும் மேற்பட்டோா் அகதிகளாக வந்தனா். இவா்களுக்கு மண்டபம் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தனித்தனி வீடுகள் வழங்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், தற்போது இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என 13 குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இலங்கைக்குச் செல்லுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காகவும் விண்ணப்பித்தனா்.
ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை. இதனால், 5 குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் படகுகள் மூலம் இலங்கை சென்றனா். அவா்கள் நிலை எங்களுக்கு ஏற்படக் கூடாது என்பதால், மாவட்ட ஆட்சியா் சிம்ரம்ஜித் சிங் காலோனிடம் கடவுச்சீட்டு பெற்றுத் தரக் கோரி மனு அளித்தனா்.