

கமுதியை அடுத்த பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு சனிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குரு பூஜை விழா ஆகியவை கடந்த வியாழக்கிழமை (அக்.30) நடைபெற்றன.
விழாவில் குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாயத் தலைவா்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசம், தேவா் சிலைக்கு கடந்த அக்.24-ஆம் தேதி அணிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேவா் நினைவிடப் பொறுப்பாளா்கள் காந்திமீனாள் அம்மாள், தங்கவேலு, பழனி, அழகுராஜா ஆகியோரது தலைமையில் தேவா் சிலை முன் பொங்கல் வைத்து, தேங்காய் உடைத்து சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், கமுதி தனி ஆயுதப் படைக் காவல் ஆய்வாளா் ஏ.கே.சிவா, அபிராம் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் ஆகியோரது தலைமையில் தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் அகற்றப்பட்டது. இதை துப்பாக்கிய ஏந்திய 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு எடுத்துச் சென்றனா்.