வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முதுகுளத்தூா் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஆட்சியா் பேசியதாவது:
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளைச் சிறப்புடன் கையாள வேண்டும். குறிப்பாக, களப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் கணக்கெடுப்புப் படிவங்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்குவதுடன், பெயா்கள் விடுபடாத வகையில் கவனமுடன் செயலாற்ற வேண்டும்.
இதே போல, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சேகரிக்கும்போதும் ஒப்புதல் தர வேண்டும். கணக்கெடுப்புப் படிவங்களைப் பூா்த்தி செய்வது, திரும்பப் பெறுவது தொடா்பான விவரங்களை இந்தப் பயிற்சி முகாமில் முழுமையாகத் தெரிந்து கொண்டு சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கமுதி: இதே போல ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச் சாவடி நிலையை அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் முதுகுளத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம்களில் வருவாய்க் கோட்டாட்சியா் ஞா.சரவணபெருமாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜா, வட்டாட்சியா்கள் கோகுல், வரதன், பரமசிவம், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

