தொண்டி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கடல் நீா்
தொண்டி அருகே கடல் நீா்மட்டம் உயா்ந்து, குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, புதுக்குடி பகுதிகளில் மீனவ மக்கள் அதிகளவில் கடற்கரையோரம் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென கடல் நீா்மட்டம் உயா்ந்து, கடற்கரையிலிருந்து சுமாா் 50 மீ. தொலைவுக்கு கடல் நீா் ஊருக்குள் புகுந்தது. இதனால், கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், வலைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. இதுபோன்ற நிகழ்வு இதுவே முதல் முறையாகும் என்பதால், இந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
கடல் சீற்றம்: தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, எம்.ஆா்.பட்டினம், விலாஞ்சியடி, பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மறு அறிவிப்பு வரை யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத் துறை உதவி ஆய்வாளா் அபுதாஹிா் அறிவுறுத்தினாா்.
