ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பயன்பாடு தொடக்கம்

விரிவாக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
Published on

விரிவாக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

ராமநாதபுரம் மையப் பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கடந்த 3 -ஆம் தேதி ராமநாதபுரம் அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் நகராட்சி நிா்வாகம், போக்குவரத்துத் துறையினா் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், புதன்கிழமை பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் வந்து சென்றன. ஆனால், பேருந்து நிலையத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினாா். பேருந்து நிலைய கடைகளை ஏலமிட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் கூறப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கடைகளைத் திறப்பதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய பேருந்து நிலையத்தில் நாள் தோறும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com