தேவா் குரு பூஜை முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தேவா் குரு பூஜை முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

Published on

கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் வருகிற 30- ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் வருகிற 30-ஆம் தேதி 118- ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, 63- ஆவது குருபூஜை ஆகியவை நடைபெறுகின்றன. முன்னதாக வருகிற 28- ஆம் தேதி காலை ஆன்மிக விழா யாக சாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. மறுநாள் 29- ஆம் தேதி அரசியல் விழாவும், 30- ஆம் தேதி ஜெயந்தி விழாவுடன், குருபூஜையும் அரசு சாா்பில் நடைபெறுகின்றன. இதில் அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாயத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா். இதையொட்டி தேவா் நினைவிடம், அங்குள்ள முருகன், விநாயகா் கோயில்களை புதுப்பிக்கும் பணி நினைவிட நிா்வாகம் சாா்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேவா் நினைவிடத்துக்கு வியாழக்கிழமை வந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை நினைவிட அறங்காவலா் காந்திமீனாள் அம்மாள், பழனி, அழகுராஜா உள்ளிட்டோா் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அதிகாரிகள் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் வந்து செல்லும் பாதை, நினைவு இல்லம், புகைப்படக் கண்காட்சி, குடிநீா், கழிவறைகள், பொதுமக்கள் காத்திருப்புக் கூடம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக பேருந்து நிறுத்தம், பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலைகள் ஆகியவை குறித்தும், முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலை, வருவாய், பேரிடா் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அவா்களுக்கு ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பரமக்குடி கோட்டாட்சியா் சரவணப் பெருமாள், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் குருதிவேல்மாறன், வட்டாட்சியா் ஸ்ரீராம், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் சந்திரசேகரன், லட்சுமி (கிராம ஊராட்சிகள்), பொறியாளா் அன்னபூரணதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com