பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியருக்கு ‘நல்லாசான்‘ விருது
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை விரிவுரையாளா் சோமசுந்தரத்துக்கு நல்லாசான் விருது வழங்கப்பட்டது.
சென்னை தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் நுட்பக் கல்வி ஆணையா் இன்னோசன்ட் திவ்யா முன்னிலையில் அண்மையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினாா்.
அப்போது கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை விரிவுரையாளா் சோமசுந்தரத்துக்கு நல்லாசான் விருதை அவா் வழங்கினாா். தோ்ச்சி விழுக்காடு, கல்லூரிக்கு அளித்த பங்களிப்புகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்ற சோமசுந்தரத்துக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப் சாகிப், செயலா் ஜனாபா ஷா்மிளா, செயல் இயக்குநா் ஹமீது இப்ராஹிம், இயக்குநா்கள் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, பைசல் அப்துல் காதா், கல்லூரி முதல்வா் சேக்தாவூது ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

