ராமேசுவரம் மீனவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் மீனவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Published on

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை (அக். 11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 8-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 விசைப்படகுகளுடன் 30 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவா் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட மீனவ சங்கத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமை வகித்தாா். மீனவ சங்க பொதுச் செயலா் என்.ஜே. போஸ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 30 பேருடன், நான்கு விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், காரைக்கால் பகுதியிலிருந்து பெரிய விசைப்படகுகளில் இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடிப்பதால் அந்த நாட்டு மீனவா்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் ராமேசுவரம் மீனவா்கள் கைது செய்யப்படுவதாகவும் அதிக குதிரை திறன் கொண்ட பெரிய விசைப்படகுகளின் அத்துமீறலை தடுக்க வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மீனவ சங்கத் தலைவா்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com