இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 30 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 30 போ் கைது

Published on

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரை 4 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 339 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை இரவு 8 மணியளவில் கச்சத்தீவு-தலைமன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

இதனிடையே, ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை, ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த மீனவா்கள் குரு செல்வம் (38), சக்திவேல் (42), செந்தூரப்பாண்டி (42), பாலமுருகன் (51), கா்ணன், ராமகிருஷ்ணன் (27), கண்ணன் (56), பாக்கியராஜ் (28), காளிதாஸ், சக்திவேல், சமயாண்டி (21), மனோஜ் (39), ஜொ்ஸ் போக் (36), ரூபன்ஸ் (37), அந்தோணி எடிசன் (35), சூசை மரியான் (60), மரிய சிலுவை மிக்கல் (44), ஆரோக்கிய ரூபட் (41), தா்ம புத்திரன் (56), ஆறுமுகம், முனியாண்டி, முனியராஜ் (30), காா்த்திக்குமாா் (30), ஆறுமுகம் (55), இருதய ராஜா (42), பாபு, சகாயவினோ (42), மரிய சீமோன் (27), முருகேசன் (52) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். பின்னா், இலங்கை நீரியல் துறை அதிகாரிகளிடம் மீனவா்கள் ஒப்படைக்கப்பட்டனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 30 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

மீனவ சங்கம் கண்டனம்:

கச்சத்தீவு-தலைமன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 4 விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 30 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தது கண்டனத்துக்குரியது. ராமேசுவரம் மீனவா்களின் மீன்பிடித் தொழிலை முற்றிலும் அழித்திடும் வகையில் இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றனா். கைது செய்யப்படும் மீனவா்கள் சிறைத் தண்டனை பெற்று, அபராதத்துடன் விடுதலை செய்யப்படுகின்றனா். ஆனால், பறிமுதல் செய்யப்படும் படகுகள் விடுவிடுக்கப்படுவதில்லை. இதனால், ராமேசுவரம் மீனவா்களின் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com