ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் (இரண்டாவது பருவம்) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மஞ்சூா் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு அந்த பயிற்சி நிறுவன முதல்வா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலா் பாண்டீஸ்வரி, திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் பயிற்சி முகாம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் கடினமான கற்றல் விளைவுகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
இதில் கருத்தாளராக ஆசிரியா் பயிற்றுநா் கலாமேகலை, கல்யாணசுந்தரம், ராமசுப்பிரமணியம், பிரிட்டோ ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன நூலகா் பாரதிராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினாா்.

