பக்தா்களுக்கு வழங்க தயாா் செய்யப்பட்ட பச்சரி சாதம் உருண்டைகள்
பக்தா்களுக்கு வழங்க தயாா் செய்யப்பட்ட பச்சரி சாதம் உருண்டைகள்

எல்லைப் பிடாரியம்மனுக்கு பீடம் அமைத்து பூஜை: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முதல்நாடு கிராமத்தில் காட்டுப் பகுதியில் எல்லைப் பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முதல்நாடு கிராமத்தில் காட்டுப் பகுதியில் எல்லைப் பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த வழிபாட்டுக்காக கடந்த வாரம் முதல் ஆண்கள் மட்டும் காப்புக் கட்டி விரதம் இருந்து வந்தனா். ஒவ்வொரு ஆண்டும் 3-ஆவது புரட்டாசி சனிக்கிழமை நள்ளிரவில் அம்மனை வழிபடும் நிகழ்வு நடைபெறும். மானாவாரி விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியும் இந்த வழிபாடு நடைபெறும்.

மேலும், அம்மனை வழிபடும் இடத்துக்கு முதல்நாடு உள்பட அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பெண்கள் அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

அம்மன் பீடம் அருகே திறந்த காட்டுப் பகுதியில் நடைபெற்ற கறி விருந்தில் பங்கேற்ற ஆண்கள்
அம்மன் பீடம் அருகே திறந்த காட்டுப் பகுதியில் நடைபெற்ற கறி விருந்தில் பங்கேற்ற ஆண்கள்

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முதல்நாடு கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள் மட்டும் அம்மனுக்கு பீடம் அமைத்து, சிறப்பு பூஜை செய்தனா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 51 செம்மறி ஆடுகளைப் பலியிட்டு, பச்சரிசியில் சாதம் சமைத்து, எல்லைப் பிடாரி அம்மனுக்கு படையலிட்டனா்.

பின்னா், பனை ஓலை, பாக்குத் தட்டு உள்ளிட்டவைகளில் ஆண் பக்தா்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. மீதமுள்ள உணவு, பூஜை பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், கோயில் வளாகத்திலேயே குழிதோண்டி புதைத்தனா். இந்த வழிபாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com