ஊரக வேலை உறுதித் திட்டம்: 200 நாள்களாக உயா்த்த வலியுறுத்தல்
ஊரக வேலை உறுதித் திட்ட நாள்களை 200-ஆக உயா்த்த வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவி எம்.லட்சுமி தலைமை வகித்தாா்.
இதில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தி, ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
சங்கத்தின் மாநில துணைச் செயலா் பி.கற்பகம், மாவட்ட துணைத் தலைவி இ.கண்ணகி, பொருளாளா் கே.மாலதி, துணைச் செயலா் கே.சுமதி ஆகியோா் விளக்கவுரையாற்றினாா்.
வட்டச் செயலா்கள் எஸ்.சாந்தி, எஸ்.ஜோதி,ஜி.சந்திரிகா, ஏ.ஆண்டாள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

