பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்
பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் கணக்கில் வராத ரூ. 35,300 ரொக்கப் பணம், பட்டாசு பரிசு பெட்டிகளை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன், தீயணைப்புத் துறையினா் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளில் முறைகேடாக பணம் கேட்டு வாங்குவதாக ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு , கண்காணிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளா் ராஜேஸ்வரி, போலீஸாா் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ.35,300 ரொக்கம், பட்டாசு பரிசுப் பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து, கூடுதல் பணம் ரூ. 35,300, பட்டாசு பரிசுப் பெட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.
