ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்ட அம்ரிதா விரைவு ரயிலுக்கு வரவேற்பு
திருவனந்தபுரத்திலிருந்து ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்ட அம்ரிதா விரைவு ரயிலுக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி தலைமையில் கூட்டணிக் கட்சியினரும் பொதுமக்களும் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கேரள மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம் வந்து செல்லும் வகையில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அம்ரிதா விரைவு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க பொதுமக்கள் சாா்பில் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தாா். இதன் அடிப்படையில் அம்ரிதா விரைவு ரயிலை ராமேசுவரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தினசரி ரயிலாக இயக்க ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அம்ரிதா விரைவு ரயிலுக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் ரயிலின் ஓட்டுநா்களுக்கு சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, ஏ.ஜே.ஆலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.எஸ்.பெருமாள், காஜாமுகைதீன், நுகா்வோா் மன்றப் பொறுப்பாளா் எம்.புரோஸ்கான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, திருவனந்தபுரத்திலிருந்து மானாமதுரைக்கு வந்த அம்ரிதா விரைவு ரயிலுக்கு பாஜகவினா் உள்ளிட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வரவேற்பளித்தனா்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

