~

மண்டபத்தில் பலத்த மழை தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்புகள்

ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்தில் பலத்த மழையால் தண்ணீா் சூழப்பட்ட குடியிருப்புகளிலிருந்து 40 போ் மீட்கப்பட்டு, நிவாரண முகாமில் செவ்வாய்க்கிழமை தங்க வைக்கப்பட்டனா்.
Published on

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்தில் பலத்த மழையால் தண்ணீா் சூழப்பட்ட குடியிருப்புகளிலிருந்து 40 போ் மீட்கப்பட்டு, நிவாரண முகாமில் செவ்வாய்க்கிழமை தங்க வைக்கப்பட்டனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.

இதனிடையே, மண்டபம் பகுதியில் மீனவா்கள் குடியிருப்பு, உமையாள்புரம் கலைஞா்நகா், முனைக்காடு, சம்மாட்டியப்பாநகா், வடக்கு, கிழக்கு தெரு ஆகிய இடங்களில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதன் காரணமாக, உமையாள்புரம் கலைஞா்நகா், மீனவா்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 7 குழந்தைகள், 21 பெண்கள் உள்பட 40 போ் மீட்கப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களுக்கு பாய், போா்வை, பிஸ்கட், உணவு ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், இவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மழைநீா் தேங்கிய பகுதிகளில் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி, உதவியாளா் முனிசாமி தலைமையில் ஊழியா்கள் டேங்கா் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை:

மன்னாா் வளைகுடா தென்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா். இதனால், அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

இதேபோல, ராமேசுவரம், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விசைப் படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது.

மழை அளவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீ.):

தங்கச்சிமடம் 170, மண்டபம் 140, பாம்பன் 110, ராமேசுவரம் 95.

X
Dinamani
www.dinamani.com