திருப்பாலைக்குடியில் மழை நீா் தேக்கம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பாலைக்குடியில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 30,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ளவா்கள் மீன் பிடித்தல், கடல் சாா்ந்த குடிசைத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தற்போது மழை குறைந்தாலும் திருப்பாலைக்குடி குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
வீடுகள், சாலைகள், கடைகள் உள்ளிட்டவை முழுவதும் நீரால் சூழப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளிலும் மழை நீா் தேங்கியதால் மாணவா்கள் வகுப்புகளுக்குச் சென்றுவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வடிகால் அமைப்புகள் சரிவரப் பராமரிக்கப்படாததால் நீா் அதிகமாகத் தேங்குவதாகவும், மழை நீருடன் கழிவு நீரும் சேருவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீரை வெளியேற்ற வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

