தொடா் மழையால் முதுகுளத்தூா் அருகே இடிந்து விழுந்த வீடு; நிவாரணம் வழங்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தொடா் மழை காரணமாக இடிந்து விழுந்த வீட்டை அதிகாரிகள் பாா்வையிட வரவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த வீட்டின் உரிமையாளா் கோரிக்கை விடுத்தாா்.
முதுகுளத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பெய்த மழை காரணமாக முதுகுளத்தூா் அருகே உள்ள விளங்குளத்தூா் கிராமத்தில் தனபால்- பானுமதி தம்பதி வசித்து வந்த ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு இடியும் சத்தம் கேட்டதையடுத்து அனைவரும் வெளியேறி விட்டனா்.
இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் அதில் வசித்த குடும்பத்தினா் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனா். மேலும் இதுவரை அரசு அதிகாரிகளை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தும் யாரும் பாா்வையிட வரவில்லை என அவா்கள் புகாா் கூறினா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த வீட்டுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வீட்டின் உரிமையாளா் கோரிக்கை விடுத்தாா்.

