ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை தகர்த்த குயிலிக்கு வேலுநாச்சியார் அங்கீகாரம்

வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் ஆயுதக்கிடங்கை மனித வெடிகுண்டாக செயல்பட்டு அழித்தவர் குயிலி. இவருக்கு சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியார் அங்கீகாரம்

வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் ஆயுதக்கிடங்கை மனித வெடிகுண்டாக செயல்பட்டு அழித்தவர் குயிலி. இவருக்கு சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியார் அங்கீகாரம் கொடுத்ததாக மகாகவி பாரதியார் தனது கவிதையில் பதிவு செய்துள்ளதாக திரைப்பட இயக்குனர் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க சிவகங்கை கிளை சார்பில் பாரதி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவரும் குறும்படம் இயக்கி பரிசு பெற்றவருமான பள்ளி ஆசிரியர் போ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜீவசிந்தன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், மாவட்ட துணைத் தலைவர் சாரல்பிரியன் ஆகியோர் பேசினர்.

  திரைப்பட இயக்குநர் இரா.காளீஸ்வரன் சிறப்புரை ஆற்றிப் பேசியதாவது: வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் வேலுநாச்சியார் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இப் போராட்டத்தில் ஈடுபட்ட குயிலி, கண்ணாத்தாள், வெட்டுடையார் காளியின் பங்கையும் பாரதியார் பதிவு செய்திருக்கிறார். சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் வெள்ளை ஏகாதிபத்திய ஆயுதக்கிடங்கை குயிலி என்கிற அருந்ததியர் பெண் தன்மீது வெண்ணை தடவி மனித வெடிகுண்டாக செயல்பட்டு அழித்தவர்.

  வேலுநாச்சியார் குயிலி பெயரால் காலாட் படையை உருவாக்கி அப்படைக்கு குயிலியின் தந்தையை தளபதியாக்கினார். வேலுநாச்சியார் சாதிமதம் பாராமல் ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்தியிருக்கிறார். மருதுபாண்டியர்களிடம் இருந்த ராமையாபிள்ளையும் குயிலின் தியாகத்தை பதிவு செய்திருக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவம், சுத்தானந்த பாரதி எழுதிய புத்தகத்திலும் குயிலி நிகழ்வு பதிவாகியிருக்கிறது குயிலிக்கு முத்துப்பட்டியில் வீரமாகாளி குயிலி என்ற கோயில் உள்ளது. நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த கண்ணாத்தாள் ஒரு மருத்துவச்சியாவார். அவர் வேலுநாச்சியாரை வெள்ளையர்கள் விரட்டி கொல்ல முயற்சி செய்யும் போது கண்ணாத்தாள் தானே வேலுநாச்சியார் உடையில் உலாவந்து கொலையானாள். இவரின் நினைவாக கண்ணுடையநாயகி கோவில் உருவானது.

   இதே போன்று வேலுநாச்சியாரை பாதுகாக்க தானே வேலுநாச்சியார் போன்று செயல்பட்டு வெள்ளையர்களால் வெட்டப்பட்டவர் தான் வெட்டுடையார். இவரின் நினைவாக வெட்டுடையார் கோவில் உருவாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பாரதியாரும் பதிவு செய்திருக்கிறார்.

  பாரதியார் கடையநல்லூரில் உள்ள மசூதியில் குர்ரான் குறித்து உரை நிகழ்த்தியிருக்கிறார். கதை,கட்டுரைகள்,கவிதைகள் எழுதி வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய பாரதியார் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார். சாதி மதத்தை கடந்து வாழ்ந்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதியார் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என காளீஸ்வரன் பேசினார்.

  முன்னதாக முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளைச் செயலாளர் மு.தமிழ்கனல் வரவேற்றார். கிளை பொருளாளர் மு.செல்லப்பாண்டி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com