சுடச்சுட

  

  நடவு முறையில் துவரை சாகுபடிக்கு மானியம்: ஆட்சியர் தகவல்

  By சிவகங்கை,  |   Published on : 08th November 2013 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடவு முறையில் துவரை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம் என்றும், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியமாக வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைக்காமல், நாற்றுகளாக வளர்த்து நடவு செய்யும் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது. இதன்படி மாவட்டத்தில் 270 ஹெக்டேரில் துவரை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

   அதிக நாட்கள் வயதுடைய, உயர் விளைச்சல் தரும், மலட்டு தேமல் நோய் எதிர்ப்பு சக்தி உடைய கோ 7, எல்.ஆர்.ஜி.41 ரகங்களை சாகுபடி செய்யதால் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. 5 அங்குலத்திற்கு 4 அங்குள அளவுள்ள பாலிதீன் பைகளில் தொழுவுரம் மணல் கலந்த கலவையை நிரப்பி, பூஞ்சாள மருந்து மற்றும் ரைசோபியம் விதை நேர்த்தி செய்த விதைகளை பாலித்தீன் பைகளில் ஒரு பைக்கு 2 விதை விதைக்க வேண்டும். இதன்படி ஒரு ஏக்கருக்கு 2,500 பைகள் போதுமானது.

   விதைத்த 25 முதல் 30 நாட்களுக்கு பூவாளியால் நீர் பாய்ச்சி நாற்றுகளை வளர்க்க வேண்டும். நடவு வயலினை நன்கு உழவு செய்து மண் மாதிரி ஆய்வின்படி அடியுரம், நுண்ணூட்ட உரங்கள் இட்டு 6 அடி இடைவெளியில் ஆழச்சால் செய்திட வேண்டும். ஆழச்சால் வரிசையில் 2 அடி இடைவெளியில் பாலித்தீன் பை நாற்றினை அரை அடி குழி நடவு செய்து 15 முதல் 20 நாள்களில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். நல்ல நாற்றினை மட்டும் வைத்து விட்டு இரண்டாவது நாற்றினை அகற்ற வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 30ஆவது நாள்களில் நுனிக்குருத்தினை கிள்ளி விடுவதன் மூலம் பக்க கிளைகள் அதிகமாகத் தோன்றி பூங்கொத்துகள் அதிகரிக்கும்.

    பூ பூக்கும் சமயம் 2 சதம் டி.ஏ.பி. கரைசல் தெளிக்க வேண்டும். பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். வேளாண் துறை மூலம் துவரை நடவுக்கு சொட்டு நீர் பாசனம் மானியத்தில் வழங்கப்படுகிறது. துவரை பூக்கும் பருவத்தில் காய்ப்புழுவினைக் கட்டுப்படுத்த பூச்சி கொல்லி மருந்து தெளிக்கலாம்.

   நடவு முறையில் துவரை சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறமுடியும். தற்போது பெய்து வரும் பருவமழையைப் பயன்படுத்தி துவரை நடவு செய்ய விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai