சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஆர்.எம். மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் புதன்கிழமை மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த போட்டிகள் மற்றும் செயல் விளக்கப் பயிற்சி முறைகள் நடைபெற்றன.
இப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவுப்படி மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்தல், மற்றும் மாணவ, மாணவியரிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் அவற்றின் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்தும் கட்டுரைப் போட்டிகள், ஒவியப்போட்டிகள், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மழைநீர் சேகரிப்பின் செயல்விளக்கம், குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.
இப்போட்டி மற்றும் செயல் விளக்கப் பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவ, மாணவியருக்கும், முதலிடம் பிடித்தவர்களுக்கும் பள்ளித் தாளாளர் எஸ். எம். பழனியப்பன் பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார். முன்னதாக பள்ளி மேலாளர் என். ஜோதிராஜா வரவேற்றார். பள்ளி முதல்வர் எஸ். பழனியப்பன் மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழாசிரியர் எஸ். முத்துக்கிருஷ்ணன் செய்திருந்தார். விழா முடிவில் துணை முதல்வர் எஸ். தேன்மொழி நன்றி கூறினார்.