சிவகங்கை, செப். 23: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கியின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு நடைபெற்ற இம்முகாமில், நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த 75 மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி அதிகாரி டாக்டர் எ.விஜயலெட்சுமி தலைமையி லான மருத்துவக்குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜி.கோமதி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் இரா.இந்திரா, தமிழ்த்துறைத்தலைவர் க.சத்யபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கே. வசந்தமீனா, செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலர் கே.ஷீலா, முகாம் அமைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.