திருப்புவனம் ஸ்ரீபுஷ்பவனேசுவரர் சமேத செüந்தரநாயகியம்மன் கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ஸ்ரீபுஷ்பவனேசுவரர் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சந்தனாதி தைலம், திருமஞ்சனப் பொடி, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தூப, தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனையொட்டி செவ்வாய்க்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து, கோயில் எதிர்புறம் உள்ள வைகையாற்றங்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அதன்பின் புனித நீராடிய பின்னர் சுவாமி சன்னதி கொடிமரம் முன்பு மோட்ச தீபம் ஏற்றியும், இறைவனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் மேலாளர் பா.இளங்கோ, கண்காணிப்பாளர் எம்.ஏ.செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.