Enable Javscript for better performance
பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைவில் முடிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைவில் முடிக்க கோரிக்கை

    By சிவகங்கை  |   Published on : 28th January 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை, ஜன. 27: சிவகங்கை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில், கடந்த 2007ஆம் ஆண்டு, ரூ.23.5 கோடி நிதியில், பாதாள சாக்கடைத் திட்டப்பணி துவங்கியது. இதில், கழிவு நீர் வெளியேற்றும் கட்டமைப்பு, ஆள்நுழைவு தொட்டிகள், கழிவு நீர் போக்கு குழாய் உள்ளிட்ட 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    2009-இல் முடிக்கப்படும் எனக்கூறப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொட்டகுடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வெளியேறும் நீரை புல் வளர்ப்புக்கு பயன்படுத்தலாம் என முடிவு செய்த போது அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது முற்றிலும் தடைபட்டுள்ளது.

    இதனால் மழைக் காலங்களில் தெருக்களில், கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இப்பகுதியில் நடந்து செல்வோர் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக காந்தி வீதி, பஜார் பகுதி, திருப்பத்தூர் சாலை, சிவன் கோயில் சாலை உள்பட பல்வேறு முக்கிய வீதிகளில் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து நகராட்சி தலைவர் அர்ச்சுனன் கூறியது: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க  வேம்பங்குடி உள்ளிட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளை துவங்க முயன்ற போது எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து முத்துப்பட்டியில் 85 ஏக்கர் அரசு நிலத்தை நகராட்சி சார்பில் குத்தகைக்கு வாங்கியுள்ளோம். இதில் நவீன தொழில் நுட்பத்த்தில் பசுமைத் தீவனமான புற்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்கும் ஒருவர், பசுமைத் தீர்ப்பாயத்தில் தடை வாங்கி விட்டார். விரைவில் பசுமைத் தீர்ப்பாய தடை நீங்கியதும்  சுத்திகரிப்பு நிலைய பணிகள் துவங்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai