காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நகை வியாபாரியைத் தாக்கி 41 பவுன் நகை, ரூ. 1.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி முத்தூரணிப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (35). இவர், காரைக்குடி ஆவிச்சி செட்டியார் தெருவில் நகைக் கடை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு ஊர்களிலுள்ள நகைக் கடைகளுக்கு நகைகள் செய்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நகை விற்பனைக்காக தன்னுடைய காரில் ஹரிபிரசாத், நண்பர் குருபிரசாத் என்பவரோடு அறந்தாங்கி சென்றுள்ளார். அறந்தாங்கியில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு மாலையில் காரைக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். அறந்தாங்கி முக்கியச் சாலையில் வந்தபோது கார் எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டிய குருபிரசாத் மயங்கினார். ஹரிபிரசாத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களது காரின் பின்னால் ஒரு காரில் வந்த 4 பேர், விபத்தில் காயமடைந்த குருபிரசாத்தையும், ஹரிபிரசாத்தையும் காரைக்குடி அருகேயுள்ள கண்டனூர் மருத்துவமனைக்கு செல்லலாம் என நகை பையுடன் தங்களது காரில் ஏற்றிக்கொண்டு கண்டனூர் நோக்கி சென்றனராம்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லாமல் கார் மாற்றுப் பாதையில் செல்வதை கண்ட ஹரிபிரசாத் சந்தேகமடைந்து கார் எங்கே செல்கிறது என்று கேட்டராம். அதற்கு உடன் வந்தவர்கள் உரிய பதில் தராததால், ஹரிபிரசாத் காரின் கதவை திறந்துகொண்டு நகைப் பையுடன் வெளியே குதித்துள்ளார்.
அப்போது, காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கிய ஒருவர் உருட்டுக்கட்டையால் ஹரிபிரசாத்தை தாக்கிவிட்டு, நகைப் பையை பறித்துக்கொண்டு, மயங்கிய நிலையில் இருந்த குருபிரசாத்துடன் காரில் அந்த கொள்ளைக் கும்பல் தப்பி சென்றுவிட்டதாம். அந்த பையில் 41 பவுன் நகைகளும், ரொக்கம் ரூ. 1.15 லட்சமும் இருந்துள்ளது.
இதுகுறித்து ஹரிபிரசாத் சாக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.