மாணவர்கள் நல்ல நூல்களை தேடிப் படிப்பதன் மூலமே அறிவார்ந்த சமூகத்தை கட்டமைக்க முடியும் என எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் கஸ்தூரிபாய் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முத்தமிழ் மன்றத்தின் 35-ஆம் ஆண்டு கலை இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவுக்கு இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் டி.என்.அன்புத்துரை தலைமை வகித்தார். முத்தமிழ் மன்ற நிர்வாகி செல்லமுத்துவேலு முன்னிலை வகித்தார்.
விழாவில், எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: உலகில் உள்ள பிற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழிக்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. உதாரணமாக ஒரு பொருளை ஒட்டியும், வெட்டியும் வாதிடக் கூடிய மொழி தமிழ் மொழி மட்டுமே. அந்த தமிழ் மொழியின் அருமை கருதி இன்றைய மாணவர்கள் நல்ல நூல்களை தேடிப் படிப்பதன் மூலமே அறிவார்ந்த சமூகத்தை கட்டமைக்க முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மகிழ்ச்சியையும், மனநிறவையும் தருவது பணமே, உறவே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு கோ.தாமரைச்செல்வன் நடுவராக இருந்தார். பணமே எனும் தலைப்பில் கவிஞர் சுந்தராஜன், ராஜன் ஆகியோரும், உறவே எனும் தலைப்பில் வேம்புபாலா, மேரிசெல்வராஜ் ஆகியோரும் பேசினர். வழக்குரைஞர் சேதுபாண்டியன் நன்றி கூறினார்.